வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அடிமுதல் முடிவரை இன்பம் !


நம் முன்னோர்களின் மகிழ்ச்சி என்பது குறிப்பாக வழிபாட்டில் இறைவனின் அருள்காட்சியில் மிகுதியாக அடங்கியிருப்பதைக் காணலாம்.

காட்டாக, நம் தமிழ் பக்தி இலக்கியங்களை காட்டலாம்.

அவற்றில் ஒன்று ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரின்
" திருப்பாசுரங்கள்" ஆகும்.

இவர் இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை, ஒவ்வொன்றாக கண்குளிரக்கண்டு , பெற்ற மகிழ்ச்சியை,
இவரின் பத்து பாசுரங்கள் விளக்குகின்றன.


முதலாவது பாசுரம்,



"அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்
                                                                   தம்மான் திருக்
கமல் பாதம்வந்து எண்கண்ணில் உள்ளன ஒக்கின்றதே "




முதல் பாசுரத்தில், பாணாழ்வார் காயம்பூமேனியனின்
 திருவடிகள தமேவந்ததன் கண்ணுக்குள்
புகுந்தன போல காட்சி தருவதாக மகிழ்கிறார்.



விளக்கம்;

திருவரங்க கோயிலில் கண்வளர்ந்தருளும் அழகிய மணவாளன் தூயவன்;உலகிற்குக் காரணமாய் இருப்பவன்;
வள்ளன்மையுடையவன்;அடியார்க்கு என்னை அடிமையாக்கிய விமலன்;மணம் நிறைந்த சோலை சூழ்ந்ததிருவேங்கடமலையில் இருப்பவன்;கைம்மாறு வேண்டத நிமலன்;தன் பேறாக உதவும் நின்மலன்;நீதி வ்ழுவாத திருநாட்டு தலைவன்;அவனுடைய அழகிய
தமரை போன்ற திருவடிகள் தமே வந்து என் கண்ணுக்குள் புகுந்தன போலக் காட்சி தருகின்றன!



2,வது பாசுரம்,



"உவந்த உள்ளத்தனா உலகம் அளந்து அண்டம்உற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கனைக் காகுத்தன் கடியார்பொழில்
                                           அரங்கத் தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாம்என் சிந்தனையே!"




இரண்டாவது பாசுரத்தில்,ஆழ்வார்,வேங்கடவனின் திருவரையில் சாத்தியுள்ளபொன்னடையின் மீது ஈடுபடுகிறார்.


விளக்கம்;


மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு மூவுலகங்களையும் அளந்தவன்;
தன் நீள் முடி அண்டத்தில் பொருந்தும்படி நிமிர்ந்தவன்;இராமனாய் தோன்றி அரக்கர்களைக் கொடிய அம்புகளால் அழித்தவன்;
அவன் திருவரையைச் சூழ்ந்துள்ள சிவந்த திருபீதம்பரத்தின்மேல் என் எண்ணங்கள் பதிந்தன.



3,வது பாசுரம்,




"மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான்
அந்தி போலநிறத் தாடையும் அதன்மேல் அயனைப்
                                       படைத்த தோர்எழில்
உந்தி மேலதன் றோ! அடி யேன்உள்ளத் தின்னுயிரே!"




இப் பாசுரத்தில், வேங்கடவனின் திருநாபீகமலத்தின் தன் இனிய உயிர் உள்ளது என்கிறார்.


 விளக்கம்;


திருவரங்கன் குரங்குகள் கிளைக்கு கிளை தாவும் வட வேங்கடம் எனும் பெருமை பொருந்திய
மலையில் நிற்கிறான்;அங்கே அமரர்கள் அவனைப் பூக்கள் கொண்டு  வழிபடுகிறார்கள்;
அவனுடைய அந்திவானம் போன்ற சிவந்த அரை ஆடையின் மீதும்,அதற்குமேலே உள்ள பிரமனைப் படைத்த
ஒப்பற்ற எழில் கொண்ட கொப்பூழின் மீதும் என் இனிய உயிர் உள்ளது!



4,வது பாசுரம்,



"சதுர மாமதிள் சூழ்இலங் கைக்கிறை வன் தலைபத்து
உதிர ஓட்டிஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயில் ஆடரங்கத் தம்மான் திருவயிற்று
உதர பந்தம்என் உள்ளத் துள்நின் றுலாகின்றதே!"




இப் பாசுரத்தில்,உதரபந்தம் எனும் திருவாபரணத்தின் அழகில் திளைக்கிறார்.


 விளக்கம்;

திருவரங்கத்தில் இனிமையாக வண்டுகள் இசைக்கின்றன; அவ்விசைக்கேற்ப மயில்கள் கூத்தடுகின்றன;
அங்கு அரங்கநாதன் எழுந்தருளியுள்ளன்;அவனே ராமனாக தோன்றியவன்;நாற்சதுரமாய் உயர்ந்த மதிலால்
சூழப்பட்ட இலங்கை அரசனான இராவணனின் பத்து தலைகளும் உதிரும்படி கொடிய அயன்படையை ஏவியவன்;
கடல் போன்ற நிறத்தையுடையவன்; அவன் திருவயிற்றில் கட்டப்பட்டிருக்கும் உதரபந்தம் என்னும் திருவாபரணம்
என் நெஞ்சின் உள்ளே நிலையாக உலா வருகின்றது!


5,வது பாசுரம்,



"பாரமாய பழவினை பற்றறுத் தென்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்
                                                தம்மான்திரு
ஆர மார்வ தன்றோஅடி யேனை ஆட்கொண்டதே!"



இப் பாசுரத்தில்,மார்பின் அழகில் மயங்குகிறார்.


 விளக்கம்;


திருவரங்கன் என் கனமான பழைய தீவினைகளை வேரோடு போக்கினான்;என்னை தன்பால் அன்புடையவனாக ஆக்கினான்;
அத்தோடன்றி என் நெஞ்சினுள்ளே புகுந்து தங்கினான்;இப் பேற்றினைப் பெற யான் என்ன மாதவம் செய்தேனோ?அறியேன்.
அவன் மார்பில் திருமகள் உறைகின்றாள்;முத்துமாலை அழகு செய்கின்றது;அவ் அழகிய மார்பு என்னை அடிமையாக ஆக்கிக்கொண்டது!


6,வது பாசுரம்



"துண்ட வெண்பிறை யன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ்பொழில் சூழரங்கநகர் மேயஅப்பன்
அண்டர் அண்ட பகிரன் டத்தொரு மாநில எழுமால்
                                                   வரைமுற்றும்
உண்ட கண்டம் கண்டீர்! அடியேனை உய்யக் கொண்டதே!"


;


இப் பாசுரத்தில், ஆழ்வாரின் பார்வை சிறிது மேலே சென்று அவர் கழுத்தின் அழகில் மனதை இழக்கிறார்.

  விளக்கம்

அழகிய வண்டுகள் வழும் மலர்ச் சோலையால் சூழப்பட்டது திருவரங்கம்; அங்கு விரும்பி உறையும் பெருமானே
முற்றாத திறங்களை முடியில் கொண்டுள்ள சிவனது தீவினையை போக்கியவன்;அண்டத்தில் வாழும் உயிர்களையும்,
அண்டத்தையும்,புற அண்டங்களையும் மண்ணையும் ஏழு மலைகளையும் உண்டவன்;அவன் திருக் கழுத்து என்னை
உய்யக் கொண்டது;


7,வது பாசுரம்



"கையி னார்சுரி சங்கனல் ஆழியர் நீள்வரைபோல்
மெய்யினார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் அணிஅரங்கனார் அரவின் அணைமிசை
                                        மேய மாயனார்
செய்யவாய் ஐயோ! என்னை சிந்தை கவர்ந்ததுவே!"




இப் பாசுரத்தில்,ஆழ்வார் அரங்கனின் திருப்பவளம் தன் நெஞ்சின் உறுதியை கவர்ந்ததாக கூறுகிறார்.

விளக்கம்;


திருவனந்தாழ்வானாகிய படுக்கையின் மீது கன் வளரும் மாயனார் தம் கைகளில் சுரிகளையுடைய பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும் நெருப்பை உமிழும் சுதர்சனம் என்னும் சக்கரபடையினையும் ஏந்தியவர் நீண்ட மலைபோன்ற திருமேனியை
உடையவர்; திருத்துழாயின் மணங்கமழும் திருமுடியினையுடைய எம் தந்தை ; அவரது சிவந்த திருப்பவளம் என் நெஞ்சின் உறுதியை  கொள்ளையடித்துவிட்டது!



8,வது பாசுரம்



"பரிய னாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத் தமலன் முகத்து
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னை பேதமை செய்தனவே!"




இப் பாசுரத்தில்,ஆழ்வார் தம் கண்களால் அவன் கமலக்கண்களைக் கண்டுஅறிவை இழந்ததாக கூறுகிறார்.

விளக்கம்;


இவன் தன் மகன் பிரகலாதனை அழிக்க வந்த இரணியன் உடலைக் காய்ந்த நாரைக் கிழிப்பது போல கிழித்து போட்டவன்;
அமரர்களும் அரிய முடியாத ஆதப்பிரான். அவன் திருமுகத்திலுள்ள கண்கள் கறுத்துள்ளன ;பக்கங்களில் அகன்றுள்ளன;
அலை எறிகின்றன;செவ்விரி பரிந்துள்ளன; நீண்டுள்ளன;பெரியனவாய் உள்ளன;அவை அடியேனை மயக்கிஅறிவை இழக்கசெய்துவிட்டன! 



9,வது பாசுரம்




"ஆலமா மரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
ஞாலம் ஏழூம் உண்டான் அரங்கத் தரவின்அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல
                                                                 தோர்எழில்
நீல மேனி ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே!"





இப் பாசுரத்தில்,திருவடி முதல் திருக்கண்கள் வரை கண்டு மங்கிய ஆழ்வார், அடுத்தாக அரங்கனின் திரண்ட மேனியின்
அழகை கண்டு தம்மை இழந்து நிற்கிறார்.

 விளக்கம்;


இவன் ஆலின் சிறிய இலைமேல் சிறு பிள்ளையாய்க் கிடந்தவன்;ஏழு உலகங்களையும் உண்டவன்;மணிமாலையையும்,
முத்துவடமும் பூண்டதும் எல்லையற்ற அழகினை உடையதுமான அவனது திருமேனி ஐயோ! அடியேன் உள்ளத்தின் காவலைக்
கொள்ளை கொண்டு போய்விட்டது!


10,வது பாசுரம்




"கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தனை
அண்டர் கோன்அணி அரங்கன்என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!"






இவ்விறுதி பாசுரத்தில், திருவரங்கனைக் கண்ட கண்கள் எந்த வடிவத்தையும் காணா விழையாது, என்கிறார் ஆழ்வார்.

 விளக்கம்;


இவன் மழைமேகம் போன்ற நிறத்தை உடையவன்;இடைப்பிள்ளையாய் பிறந்து வெண்ணெய் உண்டவன்;என் உள்ளத்தை கவர்ந்தவன்;அமரர்களுக்குத் தலைவன் ; எனக்கு அமுதமாய்ச் சுவைப்பவன்;அவனைக் கண்ட கண்கள் எந்த வடிவத்தையும் காணா விழையா!





இவ்வாறு திருப்பாணாழ்வார் திருவரங்கனின் திருக்கண், பொன்னாடை,திருநாபீகமலம், உதரபந்தம்,திருமார்பு,  திருகழுத்து, திருக்கண்கள்,திருமேனி என பெருமாலின் திருவடிமுதல் திருமுடிவரை தன் உள்ளத்தை பறிகொடுத்து,இன்பம் கண்டு,
அழியாப் புகழ் பெற்று விளங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக